பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
சேலத்தில் இடியுடன் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்தது.
சேலத்தில் இடியுடன் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்தது.
கனமழை
சேலத்தில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. இதையடுத்து மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடியுடன் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக அஸ்தம்பட்டி, அழகாபுரம், பெரமனூர், சங்கர்நகர், சூரமங்கலம், அம்மாப்பேட்டை, குகை, நெத்திமேடு, பள்ளப்பட்டி, கிச்சிப்பாளையம், களரம்பட்டி, அன்தானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாணவர்கள் அவதி
சேலம் மாநகரில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு மழையில் நனைந்தவாறு நடந்து சென்றதை காணமுடிந்தது. குறிப்பாக நெத்திமேடு, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி பகுதிகளில் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து சென்றதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நெத்திமேடு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் ஆங்காங்கே சாய்ந்து கிடந்தன.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
இதனிடையே, சிறிது நேரம் மழை நின்றது. அதன்பிறகு 6.30 மணிக்கு மீண்டும் பலத்த மழை கொட்டியது. இந்த மழையானது இரவு 8 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக 26-வது வார்டு மெய்யனூர் வி.எம்.ஆர். நகர் 2-வது தெருவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் அவர்கள் வீடுகளுக்கு தேங்கிய தண்ணீரை பாத்திரங்கள் மூலம் வெளியே அப்புறப்படுத்தினர்.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இருப்பினும், இரவு முழுவதும் ,தூங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை பெய்தால் இந்த பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து விடுவதாகவும், எனவே, மழைநீர் தேங்காத வகையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் அவதி
இதேபோல், கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, மணக்காடு ராஜகணபதி நகர், களரம்பட்டி, பள்ளப்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சேலத்தில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்ததால் கடும் குளிர் நிலவியது.