மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருகின்றனர்... கூல் லிப்பை ஏன் தடை செய்யக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப் எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை,
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்குகளை நீதிபதி பரத சக்ரவர்த்தி இன்று விசாரித்தார்.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப் எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். எனவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.