பொம்மிடி அருகே பஸ் வசதியின்றி பள்ளி மாணவ, மாணவிகள் அவதி கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
பொம்மிடி அருகே பஸ் வசதியின்றி பள்ளி மாணவ, மாணவிகள் அவதி கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே முத்தம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,088 மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பள்ளியில் கிட்டம்பட்டி, தண்டா, நாகாலம்மன் கோம்பை, சிக்கம்பட்டி, வே.முத்தம்பட்டி, மங்கலம் கொட்டாய், கனிகாரன்கொட்டாய், சிக்கம்பட்டி காலனி, மங்கலம் கொட்டாய் காலனி, தொப்பையாறு அணை பகுதி, கோம்பை, ராமதாஸ் தண்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்து செல்ல போதுமான பஸ் வசதிகள் இல்லை. இந்த பகுதியில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ் வசதி இல்லாத காரணத்தால் காலை, மாலையில் 7 கி.மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. தொப்பூரில் இருந்து காலை 6 மணி அளவில் அரசு டவுன் வருவதால், மலை கிராமங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகளால் அந்த நேரத்திற்கு பஸ் சை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் ஏராளமான மாணவ, மாணவிகள் ஒரே பஸ்சில் ஏறுவதால் படியில் தொங்கி செல்கின்றனர். இதேபோல் பொம்மிடி முதல் தொப்பூர் வரை இயக்கபடும் பஸ்கள் தாமதமாகவும், தொப்பூரில் இருந்து பொம்மிடி வரும் பஸ் காலை நேரத்தில் முன்கூட்டியே வருவதால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் பஸ்களை பள்ளி நேரத்தில் இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.