மாணவி ஸ்ரீமதி பிறந்தநாள்: அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நட்டு வைத்த குடும்பத்தினர்...!
மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.
இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்த தினம் இன்று. இதையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி பிறந்தநாளையொட்டி மாணவி ஸ்ரீமதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு எதிரே மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ஆலமரம், வேப்பமரம், இலுப்பை மரம், பலா,புன்னைமரம், நாவல் மரம் போன்ற மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மாணவி ஸ்ரீமதி பிறந்தநாளையொட்டி சொந்த ஊரே சோகமாக காட்சியளிக்கிறது.