நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி திடீர் தற்கொலை
திருவேங்கடம் அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சோமுத்துரை-கிருஷ்ணம்மாள். இந்த தம்பதிக்கு மொத்தம் 3 மகள்கள். மூத்த மகள் திவ்யா (வயது 17), பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இவருக்கு ராகிணி, சவதிகா என்று 2 தங்கைகள் உள்ளனர். 12 வயது நிரம்பிய அவர்கள் இரட்டை குழந்தைகள் ஆவர்.
கடந்த 15-ந்தேதி திவ்யா வழக்கம் போல் நீட் பயிற்சி மையத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். வயலுக்கு வேலைக்கு சென்றிருந்்த அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது, திவ்யா விஷம் குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவேங்கடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.