மரம் முறிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
தஞ்சாவூரில் மரம் முறிந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுடைய மூத்த மகள் சுஷ்மிதாசென்(வயது 15). கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி(15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை இந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பள்ளியில் வகுப்புகள் நிறைவு பெற்றதால் சுஷ்மிதாசென்னும், ராஜேஸ்வரியும் வீட்டுக்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.
அந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்து சுஷ்மிதாசென், ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் விழுந்தது. இதில் இரண்டு மாணவிகளும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதனால் அதிா்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஷ்மிதாசென், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி சுஷ்மிதாசென்னின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் - 1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம் உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த செல்வி, சுஷ்மிதாசென், த/பெ செந்தில்குமார் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த செல்வி இராஜேஸ்வரி. த/பெ கந்தன் (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று (29-8-2023) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் செல்வி சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
மாணவி செல்வி. சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.