கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
ராசிபுரம் அருகே நீச்சல் பழகியபோது 11-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
ராசிபுரம்
11-ம் வகுப்பு மாணவன்
ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மகன் தருண் (வயது 16). இவன் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் தருண் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அருகாமையில் உள்ள சேகர் என்பவரது விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அந்த கிணற்றில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. மாணவன் தருண் உடம்பில் தெர்மாகோல் கட்டிக்கொண்டு தண்ணீரில் இறங்கி நீச்சல் பழகியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று தருண் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து தருண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.