கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர் பலி- மேலும் 2 பேரின் கதி என்ன?


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர் பலி- மேலும் 2 பேரின் கதி என்ன?
x

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி வேத பாடசாலை மாணவர் உயிரிழந்தார். மேலும் ஆற்றில் மூழ்கிய 2 பேரை தேடும் பணி நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர்குலாம் என்ற வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, வேதம் பயின்று வருகின்றனர். இந்த பாடசாலையை ஆடிட்டர் பத்ரிநாராயணன் பட்டர் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வேதபாடசாலையில் பயின்று வரும் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஸ்ரீதரனின் மகன் விஷ்ணுபிரசாத் (13), சம்பத் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (14), ஈரோடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சேஷாத்திரி மகன் சூர்ய அபிராம் (13) ஆகிய 4 மாணவர்கள், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே நேற்று அதிகாலை 6 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால், திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர்.

இதில் கோபாலகிருஷ்ணன் ஆழமான பகுதியில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்தார். இதைக்கண்ட அந்த பகுதியினர் அவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே மற்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதுபற்றி ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி, 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சிறிது நேரத்தில் விஷ்ணுபிரசாத் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு 7 மணி வரை தேடியும் 2 மாணவர்களும் கிடைக்கவில்லை. இதனால் அந்த மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மேலும் இருட்டிவிட்ட நிலையில் ஆற்றில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெறுகிறது.


Next Story