வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு


வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு
x

வாய்க்காலில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார்.

திருச்சி

சோமரசம்பேட்டை:

பிளஸ்-2 மாணவர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி சித்ரா (40). இவர்களுடைய மகன் நந்தகுமார் (17) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கோவிந்தராஜின் அக்காள் அமராவதியின் வீடு திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் நாச்சிக்குறிச்சி பகுதியில் உள்ளது. அமராவதியின் கணவர் ஏகாம்பரம் விவசாயம் செய்து வருகிறார். இவர்களின் மகன் சண்முகம் (33) தில்லைநகரில் உள்ள பாஸ்ட்புட் கடையில் (துரித உணவகம்) வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நீரில் அடித்துச்செல்லப்பட்டார்

தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் நாச்சிக்குறிச்சியில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு நந்தகுமார் வந்திருந்தார். இந்தநிலையில் தனது அத்தை மகனான சண்முகத்துடன் நேற்று காலை நாச்சிக்குறிச்சி அருகே வக்கீல் தோட்டம் பகுதியில் செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் நந்தகுமார் குளிக்க சென்றார்.

அங்கு இருவரும் வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது, நந்தகுமார் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், நந்தகுமார் நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.

2 பேர் சாவு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டபடியே நந்தகுமாரை காப்பாற்ற ஆழமான பகுதிக்கு சென்றார். ஆனால் அவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். சத்தம் கேட்டு, அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும் உடனடியாக வாய்க்காலில் இறங்கி 2 பேரையும் தேடினர்.

ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால், அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

பெற்றோர் கதறல்

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து 2 பேரின் பெற்றோர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், தங்கள் மகன், மருமகனின் உடலை பார்த்து கதறி அழுதது, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதைத்தொடர்ந்து நந்தகுமார், சண்முகம் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலில் மூழ்கி 2 பேரும் இறந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story