பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

முனைஞ்சிப்பட்டி அருகே, சிறையில் உள்ள அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அருகே, சிறையில் உள்ள அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிளஸ்-2 மாணவி

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பர்மா தெருவைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவருடைய மனைவி நிர்மலா (வயது 59). இவர்களுக்கு ஜெபஸ் அபினதாப் (28) என்ற மகனும், ரெமிஸ் எல்சி லாசரஸ் (17) என்ற மகளும் உண்டு.

ஜெபஸ் அபினதாப் என்ஜினீயராக வேலை செய்தார். ரெமிஸ் எல்சி லாசரஸ் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜான் கென்னடி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

ஜாமீன் கிடைக்கவில்லை

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், பக்கத்து ஊரான பதைக்கம் காலனியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெபஸ் அபினதாப் உள்ளிட்ட இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெபஸ் அபினதாப்புக்கு 15 நாட்களுக்கு மேலாகியும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் தாயார் நிர்மலாவும், தங்கை ரெமிஸ் எல்சி லாசரசும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் நிர்மலா அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரெமிஸ் எல்சி லாசரஸ் திடீரென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் தாயார் நிர்மலா வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரமாக தட்டியும் மகள் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தனர். அப்போது ரெமிஸ் எல்சி லாசரஸ் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வடக்கு விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ரெமிஸ் எல்சி லாசரசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முனைஞ்சிப்பட்டி அருகே அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story