7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேர்ந்தமரம் அருகே, 7-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

தென்காசி

சுரண்டை:

சேர்ந்தமரம் அருகே, 7-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7-ம் வகுப்பு மாணவன்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள், கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களது மகன் சீனு (12). அதே ஊரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

மற்றொரு மகன் கணேஷ்குமார், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலையில் மாரியம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். மகன்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

காலை 11 மணியளவில் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது பள்ளி சீருடையுடன் சீனு வீட்டில் மின்விசிறியில் கயிற்றினால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தான்.

ஜன்னல் வழியே இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீனு உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

துணை சூப்பிரண்டு தெய்வம், கூடுதல் துணை சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், வேல்கனி ஆகியோர் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் குவிப்பு

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story