165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவர்கள்


165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவர்கள்
x

ராமநாதபுரத்தில் 30-வது தேசிய அறிவியல் மாநாட்டையொட்டி 165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டு தெரிவித்தார்.

ராமநாதபுரம்

பாரதிநகர்,

ராமநாதபுரத்தில் 30-வது தேசிய அறிவியல் மாநாட்டையொட்டி 165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டு தெரிவித்தார்.

அறிவியல் மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பாரதிநகர் நேஷனல் அகாடமி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து கடந்த 30 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.

இதில் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டு தங்களின் புதிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கலந்துகொண்டு தங்களின் பள்ளிக்கு பெருமை சேர்ப்பதோடு தங்களின் கண்டுபிடிப்பு மூலம் மனித சமூகத்திற்கு உதவி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்துகொள்வது என்ற மையக் கருப்பொருளில் நம்முடைய சுற்றுச்சூழலை தெரிந்து கொள்ளுதல், ஆரோக்கியமான ஊட்டச்சத்து, நல்வாழ்வை வளர்ப்பது, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஆரோக்கியத் திற்கான சமூக மற்றும் கலாசார நடைமுறைகள், தன்னம் பிக்கைக்கான சூழலியல் அடிப்படையில் அணுகு முறைகள், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போன்ற துணை கருப்பொருள்களை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் 165 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

சான்றிதழ்

இதில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி குழந்தைகள் உள்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ-மாணவிகளை பாராட்டினார். ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தவர்களுக்கு குழந்தை விஞ்ஞானி என சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்குபெறும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி தெரிவித்தார். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் அறிவியல் இயக்க மாவட்டதலைவர் அய்யாசாமி தலைமை தாங்கினார்.

பரிசு

நேஷனல் அகாடமி மெட்ரிக்பள்ளி தாளாளர் டாக்டர், செய்யதா அப்துல்லா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தியாகராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்பாளர் சதக் அப்துல்லா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலாஜி, ரவி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி உதவி பேராசிரியர் கருணாகரன், நேஷனல் அகாடமி பள்ளி முதல்வர் ராஜமுத்து, மாவட்ட செயலாளர் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story