அரசு ஊழியர்கள் போராட்டம்


அரசு ஊழியர்கள் போராட்டம்
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் புகழேந்தி இளவேனில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் குமார்,‌ கல்பனா, மகேஸ்வரி, ஜெயவேல், பிரபாகரன், யாரப்பாஷா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

அகவிலைப்படி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப் படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story