காது கேளாதோர் சங்கத்தினர் போராட்டம்


காது கேளாதோர் சங்கத்தினர் போராட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதோர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதோர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பலராமன், பொருளாளர் கோவர்தனன், மக்கள் தொடர்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொழி பெயர்ப்பாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் காது கேளாதோரை அலைக்கழிக்கக்கூடாது. அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமைக்கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்க உடனே முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகை 1,500 ரூபாயை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித்தர வேண்டும். வாரிசு அடிப்படையில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.

அரசாணை

ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளை உயர்த்தி, சைகையில் கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.


Next Story