தீராம்பட்டியில் கிராமசபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்


தீராம்பட்டியில் கிராமசபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
x

குட்டப்பட்டி ஊராட்சி தீராம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

மேச்சேரி

குட்டப்பட்டி ஊராட்சி தீராம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம சபை கூட்டம்

மேச்சேரி அருகே உள்ள குட்டப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் தீராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீதேவி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிமேகலை, நளினி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தீராம்பட்டியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ரெயில்வே பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தனர்.

கருப்பு கொடி போராட்டம்

அப்போது பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நங்கவள்ளி போலீசார் மற்றும் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரெயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுப்பட்டி ஊராட்சி

ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் எலத்தூரில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி தலைமை தாங்கினார். காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அகிலா பற்றாளராக கலந்து கொண்டார். மாவட்ட உதவி இயக்குனர் தணிக்கை ராமஜெயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சி செயலாளர் செல்வராஜ் வரவு செலவு கணக்கை படித்தார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தெய்வானை, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணைச்செயலாளர் பாவேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜூனன், வக்கீல் வீரமணி மற்றும் நிர்வாகிகள் திடீரென எலத்தூர் காலனி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story