வலுவிழுந்த பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்


வலுவிழுந்த பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே வலுவிழந்து காணப்படும் பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வலுவிழந்து காணப்படும் பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள கீழபனங்காட்டாங்குடியில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சாலையோரத்தில் பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்ட இடம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, காரைக்கால், நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் போன்ற முக்கிய ஊர்களின் வழித்தடம் ஆகும்.

இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பயணிகள் நிழலகம் வலுவிழந்த நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது.

பயன்படுத்த முடியாத நிலை

கட்டிடம் கூரைப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு உள்ளது. இதனால் அந்த பயணிகள் நிழலகம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அந்த பயணிகள் நிழலகம் இருந்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் சாலையோரங்களில் பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழலகத்தை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story