மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி அறிவிப்பு
மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி அறிவித்துள்ளார்.
சென்னை,
மின்வாரிய சேவைகளுக்கு லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி வன்னிய பெருமாள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்வாரிய சேவைகளை வழங்குவதற்கு, ஒருசில அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்பதும், வாங்குவதும் வழக்கத்தில் உள்ளதாக மின்வாரியத்துக்கு புகார் வந்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைக்கப்பெற்றால், அதை உடனே அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க தலைமை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.