தனியார் உரக்கடைகளில் காலாவதியான மருந்து விற்றால் கடும் நடவடிக்கை
தனியார் உரக்கடைகளில் காலாவதியான மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிற அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 27 ஆயிரத்து 277 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 545 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் கோடை கால சாகுபடிக்கு தேவையான விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் கையிருப்பில் உள்ளது. 24 ஆயிரத்து 962 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் காலாவதியான மருந்து, உரம் மற்றும் விதைகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கையேடு
முன்னதாக, சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களின் பூச்சி நோய் தாக்குதல் தடுப்பு முறைகள் மற்றும் மேலாண்மை குறித்த கருத்துக் காட்சி மற்றும் இயற்கை முறையிலான வேளாண் விலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். தொடர்ந்து 'நம்ம சிறுதானியம்' என்ற கையேட்டை வெளியிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர், ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.