கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை
கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
தஞ்சாவூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புதிய தொழிற்சாலைகள்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததற்குப்பிறகு, ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கம்பெனிகள் வந்திருக்கின்றன. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மிக முக்கியமான முதல் காரணம், இந்த ஆட்சி மீதான மரியாதையும், நம்பிக்கையும் தான்.
இரண்டாவது முக்கிய காரணம், மாநிலத்தில் நிலவும் அமைதி. கடந்த 2 ஆண்டுகளில் எந்தவொரு பெரிய சட்ட-ஒழுங்கு பிரச்சினையும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. அந்த அமைதியை நிலைநாட்டக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டம் ஒழுங்கு
இந்த நிலை தொடர காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கள்ளசாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு, கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றை தடுக்க வேண்டும்.
குற்றங்கள் மிக, மிகக் குறைந்துகொண்டு வருகிறது. முழுமையாக குறைந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கும் தெரியும். குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமைய வேண்டும்.
கடும் நடவடிக்கை
போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமில்லை, எதிர்கால வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்களுக்கு குட்கா, பான்மசாலா மற்றும் போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேல் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
கண்காணிப்பு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, பள்ளி மாணவர்களிடையே பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுத்தர சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல் மற்றும் போக்சோ வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை பெற்றுத் தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உங்கள் வரம்புக்குள்ளாக பதியப்படும் அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து கண்காணித்து, சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டும். நீதிமன்ற நிலுவை வழக்குகளை கண்காணித்து சாட்சிகள் மற்றும் தேவையான தரவுகளை நீதிமன்றத்தில் வழங்கி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
குற்றப்பத்திரிகை பதியப்பட்டு, கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படாத வழக்குகளை உடனடியாக கோர்ட்டுகளுக்கு கொண்டு செல்லவேண்டும். கோர்ட்டுகளுடன் இணைந்து இந்த பணிகளை துரிதப்படுத்தி, உடனடியாக தண்டனை வாங்கித் தந்தால் மட்டும்தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும்.
பயிற்சி
பொதுமக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது, அவர்களை நீங்கள் நடத்துகின்ற விதத்தை பொறுத்துத்தான் காவல் துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும், கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள்.
எனவே சட்டப்படி மேல்நடவடிக்கை எடுத்து அந்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இது பற்றி நானே மனுதாரர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளப் போகிறேன். காவல்துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டீர்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள இருக்கிறேன்.
சில மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இப்படியான புகாருக்கு இடமில்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையுடன் உங்களிடம் குறையை சொல்ல வரும்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், முதல்-அமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி.(சட்டம் மற்றும் ஒழுங்கு) அருண் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.