பெருந்துறை சிப்காட்டில் விதிமுறையை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை
பெருந்துறை சிப்காட்டில் விதிமுறையை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெருந்துறை சிப்காட்டில் விதிமுறையை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கருத்து கேட்பு கூட்டம்
பெருந்துறை சிப்காட் வளாக கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பல்வேறு அமைப்பினர் உள்பட பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை கேட்டறிந்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
புற்றுநோய் சிகிச்சை
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசை பொறுத்த அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக, தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதேசமயம் பொதுமக்கள் நலன் மற்றும் இயற்கை நலனை பாதுகாக்கும் வகையில் தொழிற்சாலைகளும் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிப்காட் தொழில் வளாகத்தில் கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிப்காட் பாதிப்பு காரணமாக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகஅளவில் இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளனர். இதற்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைக்காக தனி துறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
சென்னிமலை ஒன்றியத்தில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அந்த பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக அங்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மேலும், சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளை மீறி சுத்திகரிப்பு கழிவுநீரை வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், பெருந்துறை தாசில்தார் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.