கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
சேலம் அருகே உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுநீர் கலந்து, நுரையுடன் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று மாலை திருமணிமுத்தாற்று பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமணிமுத்தாறு
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சிறிய சாயப்பட்டறை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் திருமணிமுத்தாறில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், ஆற்றில் ஆக்சிஜன் குறைவால் மீன்கள் கூட வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது.
சேலம் மாநகராட்சியில் 4 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில் 2 மட்டும் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக 3 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுவீச்சில் செயல்படுவதன் மூலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்.
நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருமணி முத்தாற்றை மீட்டெடுக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். மாஸ்டர் பிளான் அடிப்படையில் மாநகராட்சி கழிவுநீர் கலக்காமல் 100 ஏக்கரில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, ஆற்றின் நடுவில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது என திட்டமிட்டுள்ளோம்.
சேலம் மாநகராட்சியில் 90 சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளும், 25 ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. ஆனால் வாரிய விதிமுறைகளை மீறி கழிவ நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வந்த 45 சாயப்பட்டறைகள், 5 ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் மூடப்பட்டு அதன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் மாசு கலப்பது தாய்ப்பாலில் விஷம் கலப்பதற்கு சமம் ஆகும். எனவே, கழிவுநீரை சுத்திகரிக்காமல் சட்டவிரோதமாக ஆற்றில் கலந்து விடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் தடை
தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் இருந்து 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 1,177 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 174 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டு ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு பிளாஸ்டிக் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது. இதன்மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவது முழுமையாக தடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
தொடர்ந்து சேலம் அணைமேடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.