குதிரை குட்டியை கடித்து கொன்ற தெரு நாய்கள்
ஊட்டியில் குதிரை குட்டியை கடித்து கொன்ற தெரு நாய்களால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
ஊட்டி
ஊட்டி நகரில் முக்கிய சாலையான கமர்சியல் சாலையில் நேற்று அதிகாலை குதிரை குட்டி இறந்து கிடந்தது. இதனால் கடந்த சில நாட்களாக கலெக்டர் அலுவலக குடியிருப்பு பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து குதிரை குட்டியை கடித்து கொன்று விட்டதாக நினைத்து பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் மர்ம விலங்கு கடித்து குதிரை குட்டி இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதன் பின்னர் இறந்து கிடந்த உடலை சுற்றி தெரு நாய்கள் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குதிரை குட்டி உடலை மீட்டு அப்புறப்படுத்தினர். விசாரணையில் இரவு நேரத்தில் தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து, குதிரை குட்டியை கடித்து கொன்று தின்றது தெரியவந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை கடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.