வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் வைக்கோல் கட்டுகள்
ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றிய பல கிராமங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வைக்கோல் கட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றிய பல கிராமங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வைக்கோல் கட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
வைக்கோல்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் உள்ளது. மாவட்டத்திலேயே ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடனை தாலுகாவை சுற்றிய பல கிராமங்களில் அதிகமாக நெல் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், மங்கலம் சோழந்தூர், சிங்கனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாய நிலங்களில் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி முடிவடைந்துவிட்டன. ஒரு சில கிராமங்களில் மட்டுமே விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதனிடையே ஆர்.எஸ் மங்கலம், மங்கலம், சோழந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை தவிர்த்து வைக்கோல் கட்டுகள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
வெளி மாநிலங்களுக்கு
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து ரூ.90-க்கு வாங்கி செல்லப்படும் வைக்கோல் கட்டுகள் வெளி மாநிலங்களில் ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் கூறும்போது, ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர் சுற்றிய பல கிராமங்களில் இருந்தும் வைக்கோல் கட்டுகளை ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கால்நடை பண்ணைகளுக்கு கொண்டு செல்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றிய பல கிராமங்களிலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் வைக்கோல் கட்டுகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு ஒரு கட்டு 80 ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.95-க்கு வாங்கியுள்ளோம். ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் நெல் விவசாயம் குறைவுதான். அதுபோல் இந்த பகுதியில் உள்ள வைக்கோல் மற்றும் புற்களை கால்நடைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. அதனால் தான் தமிழகத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை மாடுகளுக்கு வாங்கி செல்கின்றோம் என்றனர்.
குறைந்தவிலை
ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றிய பல கிராமங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் வைக்கோல் கட்டு ஒன்றை ரூ.90-க்கு வாங்கி சென்றுள்ள நிலையிலும் விவசாயிகளுக்கு கிடைப்பதோ ஒரு கட்டு ரூ.30-ல் இருந்து ரூ.40 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் விவசாயிகளிடமிருந்து வைக்கோல் கட்டுகளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநில கால்நடை பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு புரோக்கர்கள் பலர் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகின்றது.