எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு
எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை முடிவுக்கு வந்தது.
நெல்லை,
கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடந்தது.
இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர். அப்போது அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மிபாரக் வீட்டில் நடந்த சோதனையானது தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இதில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.