4 நாட்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


4 நாட்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நாட்களில் 14 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நாட்களில் 14 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குழந்தை திருமணம்

திருமண வயது நிரம்புவதற்கு முன்பே பள்ளி பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருமணம் என்றால் என்ன என்பது தெரியும் முன்பே இதுபோன்ற திருமணங்களை செய்து வைப்பதால் அவர்களது அறிவுத்திறன் பாதிக்கப்பட்டு எதிர்கால சந்ததிகளும் பாதிக்கப்படும் என்பதால் அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடத்த இருந்ததை அதிகாரிகள் உரிய நேரத்தில் தடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அவர்களுக்கு தகவல்அளிக்க உதவி எண்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆடி மாதம் முழுக்க திருமணங்கள் நடைபெறாத நிலையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து முகூர்த்தங்கள் அதிகம் நடந்து வருகின்றன.

அந்த மாதத்தின் முதல் முகூர்த்த நாளான கடந்த 20-ந் தேதிக்கு முன்னதாக திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 1098 மற்றும் 181 ஆகிய எண்களுக்கு குழந்தை திருமணம் தொடர்பாக பல்வேறு புகார்கள் வரப்பட்டது.

14 திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை தலைமையிலான குழுவினர் கடந்த 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 நாட்களில் பல்வேறு வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக செய்த சோதனையின் அடிப்படையில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.

மேலும் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள 14 பெண்களும் திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் படிப்பிற்கு உறுதி செய்த பிறகு பெற்றோர்களுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story