அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 3 ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த சில அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப்பேரவை மாநில பொதுச்செயலாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள், சலவைத்தொழிலாளர்கள் பலர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பச்சைமலையான்கோட்டை கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரை தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்த 6 பேருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட மகாலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வீடுகள் ஒதுக்கீடு
இதேபோல், தேனி அருகே தென்றல்நகரை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். வடவீரநாயக்கன்பட்டியில் கட்டப்பட்ட வீடுகளை தங்களுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சீர்மரபினர் நலச்சங்கம் சார்பிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சீர்மரபினர்களுக்கு பழங்குடி சீர்மரபினர் (டி.என்.டி.) என்று ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுதொடர்பான தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைப்பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.