வெளியூர் ஆட்டோக்களை அடையாளம் காண 'ஸ்டிக்கர்'


வெளியூர் ஆட்டோக்களை அடையாளம் காண ஸ்டிக்கர்
x
தினத்தந்தி 12 July 2023 3:15 AM IST (Updated: 12 July 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வெளியூர் ஆட்டோக்களை அடையாளம் காண ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் வெளியூர் ஆட்டோக்களை அடையாளம் காண ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

வெளியூர் ஆட்டோக்கள்

கூடலூர் நகரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதிகள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக, அத்தியாவசிய பொருட்களை வாங்க, பள்ளிக்குச்செல்ல ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான ஆட்டோக்கள் கூடலூருக்குள் இயக்கப்படுவதாக டிரைவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதன் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூடலூர் ஆட்டோ டிரைவர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள், ஆட்டோ டிரைவர்கள் கலந்தாலோசித்தனர். அப்போது கூடலூர் நகரில் இயங்கும் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போலீசார் சார்பில் ஸ்டிக்கர்கள் ஒட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் வெளியூர்களை சேர்ந்த ஆட்டோக்களை கூடலூர் நகருக்குள் இயக்கினால் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி

அதன்படி கூடலூர் நகரில் உள்ள ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமை தாங்கி ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி தொடங்கி வைத்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரன், ராஜ்குமார் கலந்துகொண்டு பேசினர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத் தலைவர் நஜிமுதீன், செயலாளர் பிரவீன் ராஜ், பொருளாளர் சிவசெல்வன் மற்றும் டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கூடலூர் நகரில் மட்டும் 17 ஆட்டோ நிறுத்துமிடங்கள் உள்ளன. ஆட்டோக்கள் 15 கி.மீ. தூரம் மட்டுமே ஓட்ட வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் பந்தலூர் உள்பட வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான ஆட்டோக்கள் கூடலூர் நகருக்குள் இயக்கப்படுகிறது. இதனால் கூடலூர் நகரில் உள்ள ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. ஆய்வின்போது ஸ்டிக்கர்கள் இல்லாத வெளியூர் ஆட்டோக்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story