ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்
அரசு ஆஸ்பத்திரிகளில், ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் 2 வாரம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில குடும்ப நலத்துறை, திண்டுக்கல் மாவட்ட குடும்ப நல செயலகம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் ஆண்களுக்கான நவீன கருத்தடை (வாசக்டமி) அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட குடும்ப நல செயலக துணை இயக்குனர் பூங்கோதை கூறும்போது, திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் உள்ள வட்டார, ஆரம்ப சுகாதார நிலைய அரசு ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ளலாம். இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு ரூ.1100-ம், மாவட்ட நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.200-ம் சேர்த்து ரூ.6300 வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.