தமிழகத்தில் வெப்ப அலையை சமாளிக்க நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
‘‘தமிழகத்தில் வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய வானிலை அறிக்கையானது இந்த ஆண்டு மிகப்பெரிய வெப்ப அலை ஏற்படும் என அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையினால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெப்ப அலையை சமாளிக்க ஒவ்வொருவரும் தினமும் 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுகளை சரியாக சாப்பிட வேண்டும். ஆங்காங்கே காடுகளில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்படுவதை தடுக்க செயற்கைகோள் மூலம் தமிழ்நாடு முழுவதும் காடுகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து தடுக்க குழு அமைக்கப்படும். தமிழகத்தில் 143 இடங்களில் குப்பைக்கிடங்குகளில் பயோமைனிங் முறையில் குப்பைகள் பிரிக்கப்படுகிறது. இனி வருகிற 3 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் குப்பைக்கிடங்குகள் இல்லாத நிலை உருவாக்கப்படும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு அபாயகரமான திட்டங்களும் நிறைவேற்றப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.