சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு


சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தென்காசி

ஆலங்குளம் அருகே சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சமூக நலத்துறை அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற நகராட்சி, பேரூராட்சி அளவிலான இலக்கிய போட்டிகளில் கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 18 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

வீடுகளை இடிக்க முயற்சி

தொடர்ந்து ஊத்துமலை அருகே உள்ள தங்கம்மாள்புரம் காலனியை சேர்ந்த கருப்பன் என்பவர் ஊர் பொதுமக்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், அருந்ததியர் சமுதாய மக்களாகிய நாங்கள் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக தங்கம்மாள்புரத்தில் குடியிருந்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம். எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான சம்பூத்து மாடசாமி கோவில் உள்ளது. இந்த ஊருக்கு சம்பந்தமில்லாத சிலர் நாங்கள் வசிக்கும் பகுதியில் தங்களுக்கு இடம் இருப்பதாக கூறி எங்களை காலி செய்ய கூறுகிறார்கள். எங்களுக்கு அரசு மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு அதில் வீடு கட்டி இருக்கிறோம். எங்களது வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து விடுவோம் என்று கூறுகிறார்கள். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன் தலைமையில் கொடுத்த மனுவில், செங்கோட்டை காலங்கரையில் உள்ள சுப்பன் செட்டி பாலம் சுடலை மாடசாமி கோவில் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதையில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் சென்று வருகிறார்கள். எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட இணைச்செயலாளர் முத்து மாரியப்பனும் மனு கொடுத்துள்ளார்.

நெற்பயிருக்கு நிவாரணம்

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் சேதம் அடைந்த பயிர்களுடன் விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில் ஆலங்குளம் தாலுகா கிடாரகுளம் கிராமத்தில் கிழக்கு பாசனம் மூலம் நெற்பயிர் பயிர் செய்துள்ளனர். இந்த பயிரில் நோய் தாக்கி சேதம் அடைந்துள்ளது. இதில் சுமார் 70 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறிஇருந்தார்.

கடையம் ஊராட்சி ராஜாங்கபுரம் பொதுமக்கள் சார்பில் ஊர் நாட்டாண்மை (பொறுப்பு) அய்யப்பன் கொடுத்துள்ள மனுவில், கோவிந்தபேரியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு ராஜாங்கபுரம் பகுதி மக்கள் பொருட்கள் வாங்க செல்லும் போது சிலர் பிரச்சினை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராஜாங்கபுரம் பொதுமக்களுக்கு தனியாக வாரத்தில் 3 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வீரகேரளம்புதூர் வேத கோவில் வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணவேணி, ஜோக்கின் ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், இந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போதிய செவிலியர்கள் இல்லை. உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கக்கூடிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு ஆஸ்பத்திரியாக மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பித்த பிறகும் அதற்குரிய எந்தவித செயல்பாடுகளும் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தனர்.




Next Story