ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்ல் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையில் இருந்து திருச்சி வரை செல்ல ரூ.2 ஆயிரமும், மதுரை வரை செல்ல ரூ. 2,500-ம், கோவை செல்ல ரூ.2,350-ம், திருநெல்வேலி செல்ல ரூ.2,700-ம், தூத்துக்குடி செல்ல ரூ.2,500-ம், நாகர்கோவில் செல்ல கிட்டத்தட்ட ரூ. 4 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வருகின்றன.

இந்தப் பேருந்துக் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்கவும், பொது மக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story