சம்பா-தாளடி நெற்பயிர் காப்பீடு: அவகாசத்தை மேலும் நீட்டிக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்


சம்பா-தாளடி நெற்பயிர் காப்பீடு: அவகாசத்தை மேலும் நீட்டிக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Nov 2023 2:13 PM IST (Updated: 14 Nov 2023 2:29 PM IST)
t-max-icont-min-icon

எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாததால் காவிரி டெல்டாவில் உள்ள விவசாயிகள் தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியுள்ளனர்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளையுடன் நிறைவடையும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்

காவிரியிலிருந்து உரிய நீரை பெற முடியாத காரணத்தினாலும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும் காவிரி டெல்டாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டின் உணவுத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் காவிரி பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெல் பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story