பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்கவும், மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தரவும் முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நெல், கரும்பு ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுவதுபோல, தேயிலை, எண்ணெய் வித்துகள், தோட்டக்கலை விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டு 28 மாதங்கள் கடந்த நிலையில், பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை வழங்கக் கோரி நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதைப் பார்க்கும்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க.விற்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பச்சைத் தேயிலைக்கு யதார்த்தமான விலையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. தோட்டக் கலைத் துறையின் சார்பில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான உற்பத்திச் செலவு 22 ரூபாய் 29 காசு என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயம் செய்யும்போது, உற்பத்தி செலவில் 50 விழுக்காட்டினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்துள்ளது என்றும், இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை 33 ரூபாய் 44 காசு என நிர்ணயம் செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு கப் தேநீர் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இந்த தேநீருக்கு ஆதாரமாக விளங்கும் தேயிலை விவசாயிகளுக்கு 10 பைசா கூட கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கி அவர்கள் உற்பத்தி செய்கின்ற தேயிலையை பொது விநியோகக் கடைகளில் 'ஊட்டி டீ' என்ற பெயரில் விற்பனை செய்ய உத்தரவிட்டார் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த 'ஊட்டி டீ' விற்பனையில்கூட தற்போது முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பல இடங்களில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு இதில் உடனடிக் கவனம் செலுத்தி பசுந்தேயிலைக்கான யதார்த்தமான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யவும், மத்திய அரசிடமிருந்து உரிய மானியத்தைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்கவும், மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தரவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story