ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை - மத்திய நிதி மந்திரி
“ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
அருங்காட்சியகம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த தொல்லியல் துறை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இதன் ஒருபகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் ஏராளமான பழங்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
5 ஆயிரம் பொருட்கள்
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியானது இரும்புக்காலத்தை சேர்ந்தது. இங்கு கி.மு. 270 மற்றும் 470 ஆண்டுகளுக்கு முன்புள்ள பழமையான பொருட்கள் கூட கிடைத்துள்ளன. மேலும் நெல் உமி, சிறு தானியங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் காலம் கி.மு. 657 வருடங்களுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 3,400 வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் நெல், தினை உள்ளிட்ட தானியங்களை பயிரிட்டுள்ளனர்.
நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 351 தொல்பொருட்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆதிச்சநல்லூர் பகுதியில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளன. அதை மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு இந்திய தொல்லியல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சைட் மியூசியம்
முன்னதாக ஆதிச்சநல்லூர் பரம்பில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட தள அருங்காட்சியகம் எனும் சைட் மியூசியத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர், கனிமொழி எம்.பி.யை தனது அருகில் வரவழைத்து சைட் மியூசியத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் தள அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டனர்.
பின்னர் 'தாமிரபரணி நதிக்கரை-ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி' என்ற நூலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். விழாவில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், இந்திய தொல்லியல் துறை பொது இயக்குனர் (புதுடெல்லி) கிஷோர் குமார்பாசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் விவகாரம்
பின்னர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணியை விரைவில் முடிப்போம். தமிழக அரசு கீழடியில் மிகச்சிறப்பான முறையில் பணிகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் அங்கு வந்து விவாதிக்காமல் எங்கேயோ பேசி வருகிறார்கள். பிரதமர் வந்துதான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள். அப்படி ஒரு விதி இல்லை என்றார்.