ஜெயிலர்,புஷ்பா,ஆர்ஆர்ஆர் விநாயகர் சிலைகள்; விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்


ஜெயிலர்,புஷ்பா,ஆர்ஆர்ஆர் விநாயகர் சிலைகள்; விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
x

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகல கொண்டாட்டம்; 2 வருடங்களுக்குப் பின் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும், சாலைகளின் முக்கிய சந்திப்புகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விநாயகருக்கு சந்தன காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் வீட்டில் உள்ள நபர்கள் கரைப்பது வழக்கம். அல்லது, தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான பிள்ளையார் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் இந்த மண் பிள்ளையார்களையும் சேர்த்து அனுப்பி விடுவார்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு, புரசைவாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், மூலக்கடை உள்ளிட்ட பிரதான மார்க்கெட் பகுதிகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு வந்தன. இந்த சிலைகள் ரூ.40 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக வருடா வருடம் அந்த வருடத்தின் பிரபலமாக உள்ள கதாபாத்திரங்கள் கொண்டு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மிகவும் பிரபலமான படமான ஆர்ஆர்ஆர் உருவத்தில் விநாயகர் சிலைகளும்,புஷபா படத்தில் வரும் அல்லு அர்ஜூன் புஷ்பா விநயரும், நடிகர் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் வடிவிலான விநாயகர் சிலைகளும் இந்த ஆண்டு புது வரவாக விற்பனைக்கு வந்துள்ளது.

ஓசூரில் பிரம்மாண்ட செட் அமைத்து, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சதுர்த்தி விழா துவங்கப்பட்டது. கண்களை இமைத்து காதுகளை அசைத்து காட்சி தரும் பிரம்மாண்ட விநாயகரை, பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுரசித்தனர். முன்னதாக, நடைபெற்ற கவுரி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் சுமார் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கண்காட்சி இன்று முதல் 12 நாட்கள் நடைபெறுகிறது. ஒரே இடத்தில் காணப்படும் ஏராளமான விநாயகர் சிலைகளை காண பொதுமக்கள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர்.


Next Story