ஆஸ்பத்திரியில் மாநில திட்ட குழுவினர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை மாநில திட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை மாநில திட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
சென்னை தமிழ்நாடு தேசிய சுகாதார நல்வாழ்வு திட்ட அலுவலக விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்ட மாநில திட்ட மேலாளர் மருதுதுரை தலைமையிலான திட்ட குழுவினர் லைடியாவெஸ்டர், திட்ட விரிவுரையாளர் நீலகண்டன், திட்ட விளக்கவுரையாளர் தரணி உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், வசதிகள், முதலுதவி சிகிச்சை ஆகியவற்றின் செயல்பாடுகளையும், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, 108 ஆம்புலன் சேவை திட்டத்துடன் அரசு வழங்கி உதவிகளை இணைத்து செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.
கட்டுமான பணிகள்
மேலும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு செயல்பாடுகள், மக்களைத் தேடி மருத்துவ திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள், பயன்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், இந்த திட்டங்கள் சிறப்பாக செயல்பட உரிய அறிவுரைகளை வழங்கினர். முன்னதாக புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டு மற்றும் தீவிர உயர்சிகிச்சை பிரிவு கட்டமைப்பு கட்டுமான பணிகளை இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, விபத்து மற்றும் அவசர கிகிச்சை பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு நர்மதா, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் ராஜா, ராஜலட்சுமி, மது, அனைத்து பிரிவு பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைமை செவிலியர் மகாலட்சுமி, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.