மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 41 ஆண்கள் மற்றும் 41 பெண்கள் அணிகள் என மொத்தம் 984 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாநில கூடைப்பந்து கழக செயலாளர் ஆசாஷ் வரவேற்றார். மாநில தலைவர் ஆதவ் அர்ஜுனா பேசினார். குளோபல் நிறுவனத்தின் தலைவர் முரளிதரன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகள் 6 நாட்கள் நடைபெற்றன. பெண்களுக்கான இறுதிப்போட்டியில் கோவை அணி மயிலாடுதுறை அணியினை 91-க்கு 61 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தூத்துக்குடி அணி 3-ம் இடத்தை பெற்றது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கோயம்புத்தூர் அணி 95-க்கு 92 என்ற புள்ளி கணக்கில் திருவள்ளூர் அணியினை வெற்றி கொண்டு கோப்பையை வென்றது. சென்னை அணி 3-ம் இடத்தை பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவில் காமராஜ் பொறியியல் கல்லூரியின் செயலாளர் ஜெயக்குமார், செந்திக்குமார நாடார் கல்லூரியின் செயலாளர் சர்ப்பராஜன், விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து செயலாளர் சத்தியம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையினை வழங்கி பாராட்டினர். இதில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் ஆசாஷ் அகமது, கழக பொறுப்பாளர்கள் அருள் வெங்கடேஷ், பாலன் சாந்தன், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.