மாநில அளவிலான வில்வித்தை போட்டி: சு.ஆடுதுறை அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை
மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் சு.ஆடுதுறை அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தனர்.
தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கமும், கடலூர் மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கமும் இணைந்து மாநில அளவிலான வில்வித்தை போட்டியை கடலூர் புனித வளனார் கலை-அறிவியல் கல்லூரியின் உள் அரங்கத்தில் நேற்று நடத்தியது. இதில் மகளிர் பிரிவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலெட்சுமியும், 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சந்தியாவும், தரூஷ்னியும் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை பெற்று பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர். சாதனை படைத்த பள்ளி மாணவிகளான மகாலெட்சுமி, சந்தியா, தரூஷ்னி ஆகியோரை தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் ரத்னசபாபதி, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாஷா, உடற்கல்வி ஆசிரியர் அரிகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.