மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்


மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
x

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் காங்கிரசை சேர்ந்த 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை,

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

57 இடங்களுக்கு தேர்தல்

இதில் தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஸ்குமார் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்.பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற 10-ந் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி தொடங்கியது.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்

ஒவ்வொரு மாநிலங்களவை எம்.பி தேர்வாவதற்கும் தலா 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி தி.மு.க. 4 இடங்களுக்கும், அ.தி.மு.க. 2 இடங்களுக்கும் போட்டியிடலாம். இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு இடத்தை தி.மு.க. ஒதுக்கீடு செய்திருந்தது.

இதனையடுத்து தி.மு.க. சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் கடந்த 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இவர்களை தவிர சுயேச்சையாக பத்மராஜன், அக்னிஸ்ரீ ராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன் சோழகனார், தேவராஜன் ஆகிய 5 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று கந்தசாமி, சுந்தரமூர்த்தி என மேலும் 2 பேரும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து சுயேச்சையாக மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் நிறைவு

இதற்கிடையே வேட்புமனு தாக்கல் நேற்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த 6 பேர், சுயேச்சைகள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து இன்று (புதன்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வருகிற 3-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியின்றி தேர்வாகிறார்கள்

இன்று நடைபெறும் வேட்புமனு பரிசீலனையின்போது 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதம் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்.

அந்த வகையில் சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.

வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும் மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வானது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.


Next Story