மாநில கல்வி கொள்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 650 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு


மாநில கல்வி கொள்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 650 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு
x

மாநில கல்வி கொள்கை தொடர்பான 650 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது. அதில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சமர்ப்பித்தது.

2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழுவின் உறுப்பினர்கள் எஸ்.இராமகிருஷ்ணன், பேராசிரியர் இராம சீனுவாசன், எழுத்தாளர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, இரா.பாலு, முனைவர் ப்ரீடா ஞானராணி, பேராசிரியர் பழனி, குழுவின் உறுப்பினர் செயலர் முனைவர் ஏ. கருப்பசாமி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story