அரசு ஊழியர் சங்க மகளிர் மாநில மாநாடு
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்க மகளிர் மாநில மாநாடு நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் மகளிர் மாநில மாநாடு நடந்தது. மகளிர் துணைக்குழு மாநில அமைப்பாளர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் சிவப்பிரியா வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, தமிழ்நாடு சட்ட ஆணைய உறுப்பினர் விமலா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி ஆகியோர் மாநாட்டுப் பேருரை ஆற்றினார்கள். துணை பொதுச் செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில துணைத் தலைவர் செல்வராணி, மாநில செயலாளர்கள் சுமதி, ஹேமலதா, மாநிலத் தலைவர் அன்பரசு, பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பிகா நன்றி கூறினார். வரவேற்புக்குழு சந்திரன், நடராஜன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
இந்த மாநாட்டில், சிறுமிகள், பெண் குழந்தைகளிடம் மனித தன்மையற்ற வகையில் பாலியல் துன்புறுத்தல்கள், கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பதற்கு 2 ஆண்டுகள் விடுப்பு வழங்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் அரசு பணிக்கு வர வயது வரம்பு தளர்த்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.