ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்ற பெருமை வரலாற்றில் இடம்பெறும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்ற பெருமை வரலாற்றில் இடம்பெறும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Jan 2024 11:44 AM IST (Updated: 24 Jan 2024 11:48 AM IST)
t-max-icont-min-icon

போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் மதுரை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை,

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் ரூ.62 கோடி மதிப்பில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு தார் ஜீப் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெரும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வீரருக்கு தங்ககாசு, வெள்ளிகாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

முன்னதாக விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மதுரையை தூங்கா நகரம் என்பார்கள்; போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த பெருமை. ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்ற பெருமை வரலாற்றில் இடம்பெறும்.

திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளில் மூன்று கம்பீரச் சின்னங்களை மதுரையில் நிருவி இருக்கிறது. கீழடி அருங்காட்சியகம், மதுரை கலைஞர் நூலகம், கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம் ஆகிய 3 திட்டங்கள் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தை மாதம் வந்தாலே அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுகிறார். சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகள் இருந்தன. திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம். மத்திய அரசு மதுரையில் 2016-ல் அறிவித்து அடிக்கல் நாட்டிய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

தை மாதம் பிறந்துவிட்டாலே மதுரையில் பண்பாட்டு திருவிழாதான். ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு திருவிழா உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்றுதான் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. கலைஞருக்கு ஏறுதழுவுதல் மீது தனி பாசம்; அதனால்தான் முரசொலி சின்னமாக அதை வைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story