மத்திய ஆயுதப்படை போலீஸ் தேர்வு தமிழில் நடத்தப்படும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு


மத்திய ஆயுதப்படை போலீஸ் தேர்வு தமிழில் நடத்தப்படும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு
x

மத்திய ஆயுதப்படை போலீஸ் தேர்வு, தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் மத்திய ஆயுதப்படை போலீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படுகிறது.

சி.ஆர்.பி.எப். தேர்வு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.), எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை (ஐ.டி.பி.பி.), சஷாஸ்திரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) ஆகிய படைப்பிரிவுகள் மத்திய ஆயுதப்படையின் (சி.ஏ.பி.எப்.) கீழ் வருகின்றன.

மத்திய ஆயுதப்படை போலீஸ் படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சி.ஆர்.பி.எப்.பில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னக மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

அது மட்டுமின்றி மத்திய ஆயுதப்படை போலீஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடந்த 9-ந்தேதி கடிதம் எழுதினார்.

தாய்மொழியில் எழுத...

அதில், 'மொத்தம் உள்ள 9,212 காலிப்பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கணினித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு இந்த தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும் அரசுப்பணி தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் கணினித்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறியிருந்தார்.

தமிழில் எழுத அனுமதி

இதைத்தொடர்ந்து மத்திய ஆயுதப்படை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய ஆயுத படையில் உள்ளூர் இளைஞர்கள் பங்கேற்பதற்கும், மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்கும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆயுத படைகளுக்கான காவலர் (பொதுப்பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, 13 மாநில மொழிகளிலும் நடத்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இந்தி, ஆங்கிலம் மொழிகளுடன், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, அசாமீஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் கொங்கணி ஆகிய 13 பிராந்திய மொழிகளிலும் வினாத்தாள் தயாரிக்கப்படும்.

அடுத்த ஆண்டு முதல் அமல்

அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படும்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இடையே ஒப்பந்தம் போடப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் தேர்வெழுத வாய்ப்பு ஏற்படும்.

தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டிற்கு சேவையாற்றுவதற்கு உள்ளூர் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரிவான பிரசாரத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் மாநில மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் உள்துறை அமைச்சகம் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய ஆயுதப்படைகளுக்கான எழுத்து தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தும் உள்துறை அமைச்சகத்தின் முடிவு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன்மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.


Next Story