முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு கூட்டம்
x

பொருளாதார ஆலோசனை குழுவின் 3-வது கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

பொருளாதார குழு கூட்டம்

முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் 3-வது கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், 'கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றி, ஆலோசனைகளை வழங்கி வருவதற்கு இக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குழுவின் ஆலோசனைகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும் மிக முக்கியமானவை' என்று தெரிவித்தார்.

புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

மேலும், இந்த அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து நிறைவேற்றிய திட்டங்களை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்து, விரைவில் வரும் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி, செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து குழுவின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டப்லோ, ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ழான் திரேஸ், எஸ்.நாராயண், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நிதிநிலை பாதுகாப்பு

ஏற்கனவே, முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதியும், 2-வது கூட்டம் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதியும் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும், மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் வலுவான ஆலோசனை வழங்கிடும் மையமாக விளங்குகிறது.


Next Story