சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்
ஒட்டன்சத்திரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் அரசப்பிள்ளைபட்டி குழந்தை வேலப்பர்கோவில் அருகே ரெயில்வே சுரங்கபாதை உள்ளது. இதன் வழியாகவே அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் மாணவ-மாணவிகளும் சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல முடியவில்லை. எனவே அப்பகுதியில் தண்ணீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி மற்றும் வருவாய்த்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக, சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரில் கார் ஒன்று நேற்று சிக்கி கொண்டது.
பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, குழந்தை வேலப்பர் கோவில் அருகே ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.