வெண்ணந்தூர் அருகே அரசு பள்ளியில் தேங்கும் நீரால் மாணவர்கள் அவதி
வெண்ணந்தூர் அருகே அரசு பள்ளியில் தேங்கும் நீரால் மாணவர்கள் அவதி
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே நெ.3.கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகே சேகோ பேக்டரி இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் வழியாக அருகே உள்ள குட்டைக்கு திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது.
மழைக்காலங்களில் இந்த குட்டை பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் தேங்கி நிற்கிறது. தற்போது சமீபத்தில் பெய்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் பல நாட்களாக தண்ணீர் தேங்கியது.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பள்ளி வளாகத்தின் முன்பு குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனவே மாணவ, மாணவிகள் நலன்கருதி பள்ளி பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.