புனித இன்னாசியார் ஆலய 78-வது ஆண்டு திருவிழா
விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய 78-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய 78-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள புனித இன்னாசியார் ஆலய 78-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் மறைவட்ட அதிபரும், விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய பங்குத்தந்தையுமான அருள்ராயன் அடிகளார், துணை பங்கு தந்தை கரோலின் சிபு அடிகளார் மற்றும் பங்கு இறை மக்கள் முன்னிலையில் பாளையங்கோட்டை மறை வட்ட அருட்பணியாளர் ஜான் கென்னடி அடிகளார், புனித இன்னாசியார் திருவுருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
தேர்ப்பவனி
திருவிழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின்போது தினசரி மாலையில் திருவிழா நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக 9-வது நாளான வருகிற 22-ந் தேதி மாலை தேர்ப்பவனி நடைபெறுகிறது. அதற்கு மறுநாள் மதுரை உயர்மறை மாவட்ட இளையோர் பணிக்குழு செயலாளர் பன்னீர் ராஜா அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலியும், மறையுரையும் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு மதுரை நற்செய்தி பணிக்குழு செயலாளர் அந்தோணி ராஜா அடிகளார் தலைமையில் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.