எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வு எளிதாக இருந்தது
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வு எளிதாக இருந்தது என்று திண்டுக்கல்லில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் நேற்று கணித பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 119 மையங்களில் 12 ஆயிரத்து 44 மாணவர்கள் மற்றும் 13 ஆயிரத்து 558 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 602 பேருக்கு தேர்வு நடந்தது. கணித தேர்வு தொடர்பாக திண்டுக்கல்லில் ஒரு மையத்தில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
ஸ்ரீகார்த்திக்:- கணித தேர்வில் ஒரு மதிப்பெண் முதல் 5 மதிப்பெண் வினாக்கள் வரை அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைகளை எழுதி முடித்து விட்டேன். கணித தேர்வில் அனைத்து மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். கணித தேர்வு எளிதாக இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
எளிதாக இருந்தது
விஜய்:- கணித தேர்வில் ஒரு வினாவை தவிர மற்ற அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே கேட்கப்பட்டு இருந்தன. அந்த ஒரு வினாவும் மிகவும் எளிதாகவே இருந்தது. புத்தகத்தில் இருந்த வினாக்கள் அடிக்கடி எழுதி பார்த்தவை என்பதால், எளிதாக விடைகளை எழுதி விட்டேன். கணித தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
பொன்சங்கரி:-கணித தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம். எனவே தேர்வுக்கு மிகவும் நன்றாக தயாராகி இருந்தேன். அதற்கேற்ப சிறிய, பெரிய வினாக்கள் அனைத்தும் எளிதாக விடை எழுதும் வகையில் இருந்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருப்புதல் தேர்வு வினாக்கள்
தீபிகா:- பொதுத்தேர்வுக்கு முன்பு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டு இருந்த பல வினாக்கள், பொதுத்தேர்விலும் வந்து இருந்தன. அதேபோல் புத்தகத்தில் இருந்த வினாக்களை அப்படியே கேட்டு இருந்தனர். எனவே அனைத்து வினாக்களுக்கும் எளிதில் விடை எழுதி விட்டேன்.
அருந்தமிழ்செல்வி:- கணித தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக நன்றாக படித்து இருந்தேன். வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது அனைத்தும் விடை தெரிந்த வினாக்களாக இருந்ததால், மகிழ்ச்சியாக எழுதினேன். கணித தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.