தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி


தந்தை இறந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:46 PM GMT)

கடலூரில் தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

கடலூர் பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்டகுப்பம் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 65). இவருடைய மகள் ஆதிலட்சுமி (15). இவர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ஆதிலட்சுமி எழுதி வந்தார். இதையடுத்து நேற்று நடக்க இருந்த கணித தேர்வுக்காக மாணவி படித்து வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை ரவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அவரது உறவினர்கள் ரவியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவி உயிரிழந்தார். இதை அறிந்த மாணவி ஆதிலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

தேர்வு எழுதிய மாணவி

இருப்பினும் படிப்பின் முக்கியத்துவம் பற்றி அறிந்த மாணவி, தான் தேர்வு எழுத இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் அவரது உறவினர்கள், ரவி உடலை மாலையில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் மாணவியை நேற்று காலை உறவினர்கள் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவியின் தந்தை இறந்தது பற்றி, பள்ளி ஆசிரியர்களிடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவிக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத வைத்தனர். தொடர்ந்து மாணவி தேர்வு எழுதி முடித்ததும், உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து மாலை 4 மணி அளவில் ரவியின் இறுதிச்சடங்கு நடந்தது. தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story