ஸ்ரீவைகுண்டம்: மீட்புப்பணிகளில் இந்திய ராணுவ வீரர்கள்...!
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.
இந்த நிலையில் 3 நாட்கள் ஆகியும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களை மீட்க இந்திய ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்ட மக்களை இந்திய ராணுவம் மீட்டுவருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மக்களை ரப்பர் படகுகள் மூலம் ராணுவம் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.